

திருவள்ளூர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், தேவன், சடகோபன், பரசுராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நகர தலைவர் சி.பி.மோகன்தாஸ், ஜே.கே.வெங்கடேஷ்., ஏகாட்டூர் ஆனந்தன் மற்றும் பலர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை, வடக்குராஜவீதி, ராஜாஜிசாலை வழியாக இந்த மோட்டார் சைக்கிள் பேரணி சென்றது. பின்னர் திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலை ஆயில்மில் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அதே போல திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி குப்பன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் விஜயகுமார், டி.கே.பாபு, மனோகரன், குணசேகரன், பகலவன், பிரபாகரன், சாந்தகுமார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலம் ராஜாஜிசாலை, வடக்குராஜ வீதி, குளக்கரை சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக டோல்கேட் வரை நடந்தது.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் பூண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சிட்டிபாபு, நிர்வாகிகள் தேவேந்திரன், கருணாநிதி, விஜயகுமார், ஜோதிராமலிங்கம் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தியும், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் சொக்கலிங்கம், தண்ணீர்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், பிரேம்ஆனந்த், ராமச்சந்திரன், விஜய்ஆனந்த், விமல் என 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பூந்தமல்லி மார்க்கெட் அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தி.மு.கவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் பூந்தமல்லி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காட்டுப்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரியில் தி.மு.க. பேரூர் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர துணைச்செயலாளர் ராமலிங்கம், மார்ட்டின் என்கிற பலராமன், முனிதாஸ், நல்லசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேபோல் மீஞ்சூரில் நடைபெற்ற போராட்டத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழவேற்காட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க. திருவள்ளூர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் அலவி தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்கள் அசோகன், கனிமுத்து, தமீன்ஷா, காசி, ரவி, லூர்தீன், பாலா, ஷேக்தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் நேற்று தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர் 35 பேரை கவரைப்பேட்டை போலீசார் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். மாதர்பாக்கம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையிலும், இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் முன்னிலையிலும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தா.மோ.அன்பரசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக நடந்து வந்து குன்றத்தூர் அண்ணா சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பேரூர் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, ஜபருல்லா, ஒன்றிய துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.