கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர்தூவி அஞ்சலி

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர்தூவி அஞ்சலி
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு திருவள்ளுவர் எழுதிய 1330 குறளும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த சிலையை குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த சிலை நிறுவப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி அன்று தமிழ் அறிஞர்கள் ஏராளமானோர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சென்று திருவள்ளுவர் பாதத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி சிலை அமைக்கப்பட்ட 19-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதனையொட்டி குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு மையத்தின் பொது செயலாளர் பத்மநாபன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் விவேகானந்த கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, மீனாதேவ், மதசார்பற்ற ஜனதாதள மாநில தலைவர் முகமது இஸ்மாயில், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ரெத்தினசாமி, தமிழ் அறிஞர்கள் ஆபத்துகாத்த பிள்ளை, முத்து கருப்பன், நீலகண்டன், எழுத்தாளர் பொன்னீலன், ராஜகோகிலா அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து தமிழ் அறிஞர்கள் கூட்டம் அங்கேயே நடந்தது. இந்த கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை திறப்பு ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட வேண்டும், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுதுறை சாலைக்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்த ஏக்நாத் ரானடே பெயரை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com