எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா உருவ படத்துக்கு பூஜை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விவசாய விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜெயலலிதா உருவ படத்துக்கு விவசாயிகள் பூஜை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா உருவ படத்துக்கு பூஜை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் அருகே கண்டியன்கோவில், அலகுமலை, சிவன்மலை, படியூர், கீரணூர், மறவாபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பூஜை செய்து வழிபாடு

பின்னர் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு முன்பு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர். மனு கொடுக்க வந்தவர்கள் இந்த வழிபாட்டை ஆர்வமுடன் பார்க்க திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா உருவ படத்துக்கு முன்பு வாழைக்கன்று, கரும்பு, நெற்கதிர், காய்கறி, பழவகைகள், கீரைகள் ஆகியவற்றை படையலிட்டு தேங்காய் உடைத்து மணி அடித்து கற்பூரம் ஆரத்தி செய்து அனைவரும் வழிபட்டனர். விவசாய விளைநிலம் வழியாக எண்ணெய் குழாய் பதிக்காமல் காக்க வேண்டும் என்று அனைவரும் ஜெயலலிதா உருவ படத்தை வணங்கினர்.

மேலும் படையலில் விஷம், விஷ மாத்திரை, அரளிக்காய் ஆகியவற்றையும் வைத்திருந்தனர்.

7 ஆயிரம் ஏக்கர்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விஷம், விஷ மாத்திரை, அரளிக்காயை சாப்பிட்டு தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த திட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். 4 ஆயிரம் விவசாயிகள் வாழ்விழந்து தவிப்பார்கள். சாலையோரம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

எண்ணெய் குழாய் திட்டம்

பின்னர் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு முன்பு அனைவரும் தரையில் அமர்ந்து இருந்தனர். இதைத்தொடர்ந்து தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) விமல்ராஜ் வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.

மனுவை பெற்றுக்கொண்ட தனித்துணை கலெக்டர், இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து, எண்ணெய் குழாய் பதிப்பு திட்ட பாதை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com