திருவண்ணாமலை, ஆரணி பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை, ஆரணி பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை பைபாஸ் சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது அதில் வந்த விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தாலுகா அதனூர் கிராமத்தை சேர்ந்த புளி வியாபாரி ரமேஷ் (வயது 38) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளங்கோவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த உமா (வயது 45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் ஒப்படைத்தனர்.

ஆரணி தாலுகா பாளையஏகாம்பரநல்லூரை சேர்ந்தவர் சரவணன். இவர், நடுகுப்பம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சரவணன் விற்பனை தொகை 1 லட்சத்து 16 ஆயிரத்து 10 ரூபாயை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

போளூர் அருகே மண்டல துணை ஆணையாளர் அருள்மொழி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சரவணனை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, போளூர் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com