திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் 13 குழந்தைகள் உள்பட 99 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,633 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 குழந்தைகள் உள்பட 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633 ஆக உயர்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் 13 குழந்தைகள் உள்பட 99 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,633 ஆக உயர்வு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆயிரத்தை கடந்ததால் மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கிடையே சமூக இடைவெளி குறித்தும் முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பாதிப்பானது முந்தைய நாட்களை விட தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் குறித்த பட்டியல் வெளியிடப்படும். நேற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. அதில் 99 பேர் இடம் பெற்று உள்ளனர்.

அதன்படி சேத்துப்பட்டு, பெருங்கட்டூர், தெள்ளார், வேட்டவலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், செங்கத்தில் நாவல்பாக்கம், துரிஞ்சாபுரத்தில் தலா 3 பேர், கலசபாக்கம் 4 பேர், போளூரில் 5 பேர், வந்தவாசியில் 6 பேர், கிழக்கு ஆரணியில் 7 பேர், தண்டராம்பட்டில் 8 பேர், செங்கத்தில் 10 பேர், காட்டாம்பூண்டி, திருவண்ணாமலை நகராட்சியில் தலா 14 பேர், அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 18 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3 பேரும் திருவண்ணாமலையில் பரிசோதனை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அவர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பிற பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களும் அதிகமாக உள்ளனர்.

இதில் 10 வயதுக்கு கீழ் மட்டும் 13 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,633 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com