திருவண்ணாமலை மாவட்டத்தில் 1¾ லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

மாவட்டம் முழுவதும் 1¾ லட்சம் விவசாயிகள் பயன்பெறும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1¾ லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
Published on

திருவண்ணாமலை,

பிரதமர் நரேந்திர மோடியின் கிசான் சம்மான் நிதி என்னும் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் பலர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்தனர். தகுதி உடைய விவசாயிகள் விண்ணப்பிக்க தவறியதால் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட அளவில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். வெ.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,067 கிராமங்களில் தாலுகா வாரியாக கணக்கெடுப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரத்து 516 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விவசாயிகளின் வாழ்வுக்கு இன்றியமையாததாக விளங்கும் வேளாண்மை துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், வேளாண்மை கடன், பண்ணை சார்ந்த நீண்ட காலக்கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவியாக 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த சிறப்பு நிதி அனைவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர், துணை இயக்குனர் ராஜசேகர், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com