திருவண்ணாமலைக்கு மகாதீபத்தையொட்டி 2,650 பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலைக்கு மகாதீப நாளன்று பக்தர்கள் வசதிக்காக 2, 650 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலைக்கு மகாதீபத்தையொட்டி 2,650 பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப விழா வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டமும், 23-ந் தேதி காலை பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி தீபத்திருவிழா குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தேர் புனரமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபத் திருவிழாவின்போது போக்குவரத்து இடையூறு இன்றி பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நகராட்சி மூலம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகம் மூலம் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் பக்தர்கள் காண பெரிய அகண்ட திரை கொண்ட எல்.இ.டி. டி.வி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காவல் துறை மூலம் பக்தர்கள் எந்த பகுதிக்கும் அச்சமின்றி சென்று வரும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கிரிவலப் பாதையில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பரணி தீபத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் பக்தர்களும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு பரணி தீபத்திற்கும், மகா தீபத்திற்கும் கோவிலுக்குள் செல்ல ஆன்லைன் மூலம் கட்டண சீட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வருகிற 21-ந் தேதி ஆன்லைன் மூலம் கட்டண சீட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 650 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அருகாமையில் உள்ள செஞ்சி, சேத்துப்பட்டு, ஆரணி போன்ற நகரங்களில் இருந்து வருவதற்கு கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 14 தற்காலிக பஸ் நிலையங்களும், 77 கார் பார்கிங் இடங்களும் அமைக்கப்படுகிறது. 2 இடங்களில் பக்தர்கள் பாதுகாப்பாக தங்கள் பொருட்கள் வைப்பதற்கு பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட உள்ளது.

தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகரத்திற்குள் வருவதற்கு 60 பஸ்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளன. 7 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட அன்னதான கூடங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் ஆட்டோக்களில் 2 கிலோ மீட்டர் வருவதற்கு ரூ.20-ம், 2 கிலோ மீட்டருக்கு மேல் செல்லவதற்கு ரூ.30-ம் பயண கட்டணமாக வாங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் கொண்ட ஸ்டிக்கர்கள் ஆட்டோவில் ஒட்டப்பட உள்ளது.

மேலும் மருத்துவ வசதிக்காக முக்கிய இடங்களில் 16 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் 10 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் நிறுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சுகாதார வசதிக்காக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட உள்ளது.

2 ஆயிரம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பதிவு செய்யாமல் மலை ஏறுபவர்கள் மீது வனத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com