திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் குறைந்த பக்தர்களுடன் சனிப்பெயர்ச்சி விழா நடத்த முடிவு; கவர்னர் கிரண்பெடி பேட்டி

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழாவை குறைந்த அளவிலான பக்தர்களுடன் நடத்த முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கவர்னர் கிரண்பெடி தரிசனம் செய்தபோது எடுத்த படம்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கவர்னர் கிரண்பெடி தரிசனம் செய்தபோது எடுத்த படம்
Published on

சனிப்பெயர்ச்சி விழா

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலக பிரசித்திபெற்ற சனிபகவான் கோவிலில் வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொள்ள ஆன்லைனில் முன்பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு 48 மணி நேரம் முன்பும், 48 மணி நேரம் பின்பும், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் வக்கீல் நாதன் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவு

விசாரணையின் முடிவில், கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். மேலும் கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகிய 5 பேர் கொண்ட குழு, விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி பக்தர்களுக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மாவட்ட துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், வக்கீல் நாதன் ஆகிய 5 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் காரைக்காலை அடுத்த தரங்கம்பாடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

கிரண்பெடி ஆய்வு

கூட்டத்துக்குப் பின், கவர்னர் கிரண்பெடி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், இந்து சமய அறநிலை துறை செயலர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை பாதுகாப்பாக நடத்துவது, பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

குறைந்த பக்தர்களுடன்...

மேலும் சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து சனிபகவானை கவர்னர் கிரண்பெடி எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com