மத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட்: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கருத்து

மத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
மத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட்: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கருத்து
Published on

பெங்களூரு,

மத்திய பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மிக மோசமான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் மீது நாங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம். ஆனால் எந்த துறையிலும் எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் நேரத்தில் அதிகளவில் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதனால் பா.ஜனதாவுக்கு 2-வது முறையாக மக்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசின் வரலாற்றில் இவ்வளவு மோசமான பட்ஜெட் எப்போதும் தாக்கல் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டை காட்டிலும் பட்ஜெட்டின் அளவை வெறும் ரூ.3 லட்சம் கோடி அதிகரித்துள்ளனர். விவசாயத்துறைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்களுக்கும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். அதுபற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை.

கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதாது. ஆதார் கார்டை இணைப்பது என்பது பெரிய திட்டம் ஒன்றும் இல்லை. தரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தொழில்துறைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.

இந்த மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திறகு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பசவண்ணரின் பெயரை குறிப்பிட்ட அவர், இந்த மாநிலத்திற்கு ஒரு திட்டத்தை கூட அறிவிக்கவில்லை. புறநகர் ரெயில் திட்டம் குறித்து கோரிக்கை விடுத்தோம். அதுபற்றியும் குறிப்பிடவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லாத பட்ஜெட்.

நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரிகள் சரியான ஆலோசனை வழங்கவில்லையா அல்லது பிரதமர் வழிகாட்டவில்லையா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com