தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கூட்டாம்புளி கார்நேஷன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், பறையர் சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் கடந்த 3 தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த மயான இடத்தை தற்போது குலையன்கரிசலை சேர்ந்த சிலர் அபகரிக்கும் நோக்கத்தில் மயான இடத்தில் உள்ள வேலிகளையும், முள் செடிகளையும் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தப்படுத்தியும் தரைமேல் உள்ள மண்ணால் ஆன கல்லரைகளையும் உடைத்து உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மயான இடத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி வடபாகம் சேதுபாதை ரோடு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி வடபாகம் சேதுபாதை ரோடு டி.சவேரியார்புரம் எல்லையில் இருந்து வட்டக்கோவில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி வரை ரோடு விரிவாக்கத்திற்காக இருபுறமும் குழிகள் தோண்டி சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால் அவைகள் இன்று வரை மூடப்படவில்லை. இதனால் அடிக்கடி அந்த பகுதிகளில் விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த குழிகளை மூடி சரிசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துவேல் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அதற்கு தூண்டுகோலாக இருந்த போலீஸ் அதிகாரி மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ், மற்றும் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணிக்காக எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்திற்கு மாற்றம் செய்திடும் போது, தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்கனவே சென்று வந்த அனைத்து பஸ்களும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் இருந்து முழுமையாக இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மருத்துவர் சமூக மக்களுக்கு தூத்துக்குடி தாலுகா மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள இடங்களில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி தாலுகா சிலுவைப்பட்டி கிராமம் சுனாமி காலனி மேற்கு பகுதியில் குடியிருந்து வரும் பெண்கள் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கை குறித்து போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் எங்கள் பகுதியில் உள்ள 48 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com