தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
Published on

திருச்சி,

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இந்தநிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், வெற்றிச்செல்வன், ரேணுகா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வேதாந்தா குழும நிறுவனர் அனில்அகர்வால் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் போலீசார் தாக்குதலில் காயம் அடைந்ததுபோன்று கை, கால்களில் கட்டுப்போட்டு இருந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருச்சி உறையூர் குறத்தெருவில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொருளாளர் திராவிடமணி, வங்கி பணியாளர் சங்கம் ராமராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

திருச்சி ராக்கின்ஸ் ரோட்டில் நேற்று மாலை தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட செயலாளர் கவித்துவன் தலைமை தாங்கி பேசினார். இதில் உலக தமிழ்கழக பொதுச்செயலாளர் புலவர் தமிழாளன், தமிழ் கலை இலக்கிய பேரவை செயலாளர் ராசாரகுநாதன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை மற்றும் தமிழ் தேசிய பேரியக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது நிர்வாகிகள் கூறுகையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 82 முறை விஷவாயு கசிந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கென்று ஒரு நடைமுறை உள்ளது. அதை மீறி போலீசார் செயல்பட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை தமிழகம் எங்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றனர்.

லால்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய தலைவி விசாலாட்சி, ஒன்றிய குழு கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு பழனிசாமி, ஒன்றிய செயற்குழு தங்கராஜ் ஆகியோர் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினர்.

மண்ணச்சநல்லூரில், எதுமலை பிரிவு ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மணப்பாறை பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் உசேன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் இந்திரஜித், ஒன்றியச் செயலாளர் தங்கராசு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று திருச்சி கோர்ட்டு முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com