

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடந்த 30-5-2018 அன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம்கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று கூறினார்.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ஏற்கனவே 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதேநேரத்தில் பல்வேறு தரப்பினரும், நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 19-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை ஆணையர் அருணா ஜெகதீசன் தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்க உள்ளது.
இதில் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் வருகிற 25-ந் தேதி ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ஒருநபர் விசாரணை ஆணையம் நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.