தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இலவச படகு சவாரி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்கள் இலவச படகு சவாரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இலவச படகு சவாரி
Published on

தூத்துக்குடி,

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்த 18 வயது முதல் 20 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச படகு சவாரிக்கு அனுமதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து இருந்தார்.

முத்துநகர் கடற்கரை பகுதியில் நடந்த இந்த முகாமை நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த முகாமில் காலை முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக படகு சவாரி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடற்கரையில் இருந்து சிறிது தூரம் படகுகளில் இலவசமாக சவாரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதல் நாளான நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com