தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் நேற்று ஆஜராகி வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் ஆஜர்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது 12-வது கட்ட விசாரணை நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் பதிவு செய்த வழக்குகளின் புகார்தாரர்களிடம் விசாரணை நடத்துவதற்காக மொத்தம் 42 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 3 பேர் மட்டும் ஆஜரானார்கள்.

நேற்று 10 பேர் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் நேற்று காலையில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த ஆணையத்தில் இருந்து, ஆவணங்களோடு வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் ஆவணங்களோடு ஆஜராகி உள்ளோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஆதாரத்தை சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார். அந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளோம். மேலும் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com