தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும்,

அந்த ஆலைக்கு ஆதரவாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று மாலை தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அகமது இக்பால்(மத்திய மாவட்டம்), முரசு தமிழப்பன்(தெற்கு), கதிரேசன்(வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் தவறான கொள்கை, ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இந்த ஆலையும் ஒன்று. அந்த ஆலை வந்தபோது, அது நல்லதா, கெட்டதா என்று உடனடியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

மராட்டிய மாநிலத்தில் விரட்டியடிக்கப்பட்ட இந்த ஆலை நிர்வாகம், யாரையோ பிடித்து தமிழ்நாட்டில் ஆலை அமைக்க உரிமம் பெற்று விட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவு கொடூரமான நஞ்சு. இந்த கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது.

விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்து உள்ளன. இதனை அறிந்த மக்கள் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளிக்கிறது. அரசின் கொள்கையும், அணுகுமுறையும் மக்களுக்கு எதிராக உள்ளது.

இந்த ஆலை மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி அமைக்கப்பட்டு உள்ளது. நோய் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் மக்கள் விழிப்புணர்வு பெற்று போராடி வருகின்றனர். இந்த மக்களின் குரல் அரசுக்கு கேட்கவில்லை.

அதேசமயம் தூத்துக்குடியில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டால் யாராலும் ஸ்டெர்லைட் ஆலையை இங்கு திறக்க முடியாது.

நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து போராடுவோம். மத்திய, மாநில அரசுகளே மக்களுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆற்றலரசு, மண்டல செயலாளர் தமிழினியன், வணிகர் அணி ஹாட்மென், நாட்டுப்படகு மீனவர் சங்க கயாஸ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் விமல் வங்காளியார், காந்திமதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பாத்திமாநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வரும் மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com