‘பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் நிதானமாக பேச வேண்டும்’

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் நிதானமாக பேச வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
‘பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் நிதானமாக பேச வேண்டும்’
Published on

கடலூர்,

உலக திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூர் டவுன் ஹாலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவுக்கு புலவர் சந்தானசுகிர்தராஜ் தலைமை தாங்கினார். விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு கொல்லைப்புறமாக வந்தவர் முட்டுக்கட்டை போடுகிறார். மத்திய அரசு நேரடியாக தலையிட்டிருந்தால் இப்பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். புதுச்சேரியை நூற்றுக்கு நூறுசதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதுச்சேரியில் சட்டம் -ஒழுங்கு, சுற்றுலாத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதால், புதுச்சேரி மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜரின் திட்டங்களே காரணம். பெருந்தலைவர் மிகவும் எளிமையான தலைவர். அன்னை சோனியாகாந்தியும் எளிமையானவர். அவர் கதர் சேலை தான் அணிவார். ராகுல்காந்தியும் எளிமையானவர். அதனால் தான் காங்கிரஸ் தலைவர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

முன்னதாக அவர், உலக திருக்குறள் பேரவை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாண்டுரங்கன்,கார்த்திகேயன், ராமராஜ், கலையரசன், கலை செல்வன், ராஜாராம், ராமதுரை, மணி வண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்போதுமே நிதானமாக பேச வேண்டும், மற்றவர்களை மதிக்க வேண்டும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இன்றைக்கு நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. டாலருக்கு நிகராக பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் கடந்த 4 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மத்திய அரசு கொள்ளையடித்து உள்ளது. தமிழகத்தை விட புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைவாக உள்ளது.

எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.ஆனால் எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூறிய பிறகு, அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லக்கூடாது என்பதற்காக ஏற்றுக்கொண்டேன்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதில் ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். தீவிரவாதத்தால் அன்னை இந்திராகாந்தியை இழந்திருக்கிறோம், தலைவர் ராஜீவ்காந்தியை இழந்திருக்கிறோம். அதிகப்படியான இழப்பு காங்கிரசுக்குத்தான்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com