வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியல் - தா.பழூரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்களுடைய உறவினர்கள் தா.பழூரில் போலீஸ் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியல் - தா.பழூரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அழிசுகுடி அய்யனார் கோவில் அருகே, அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர்(வயது 21) தனது நண்பர்கள் சிரஞ்சீவி, ரஞ்சித் மற்றும் ஜீவா(20) ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த ரகு என்ற ரகுவரன், சுந்தரபாண்டியன் ஆகியோர், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது. ஆனால் ராஜசேகர் உள்ளிட்ட 4 பேரும் போக மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ரகு, சுந்தரபாண்டியன் மற்றும் ராதாகிருஷ்ணன், ராணி, அமுதா, சுப்ரமணியன், கலியபெருமாள், ஜெயலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் 4 பேரையும் திட்டி, உருட்டுக் கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜீவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஜீவா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து ராஜசேகர் தா.பழூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததை கண்டித்து தாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தா.பழூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், ஜீவா உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com