

நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழி மற்றும் தோவாளை பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலையொட்டி மனுக்கள் வாங்கப்படவில்லை. எனவே திரளாக வந்த மக்கள் அங்குள்ள பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆரல்வாய்மொழி மற்றும் தோவாளையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக எங்களுக்கு சொந்தமான நிலத்தை வழங்கினோம். இதைத் தொடர்ந்து இழப்பீடு தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இழப்பீடு வழங்கும்படி நாங்கள் கேட்டோம். அப்போது 90 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட்டுவிடும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 10 மாதங்களுக்கு மேல் ஆன பிறகும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும், 2 மாதத்தில் கிடைத்துவிடும் என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். 4 வழிச்சாலை பணிக்காக எங்களது விவசாய நிலத்தையும் கொடுத்துள்ளோம். இதன் காரணமாக தற்போது வருமானம் இன்றி தவிக்கிறோம். எனவே இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.