திருபுவனை, திருக்கனூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் 2–வது நாளாக அபராதம் வசூல்

திருபுவனை, திருக்கனூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் 2–வது நாளாக போலீசார் அபராதம் வசூலித்தனர்.
திருபுவனை, திருக்கனூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் 2–வது நாளாக அபராதம் வசூல்
Published on

திருபுவனை,

புதுவையில் மே 1ந்தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி கடலூர் சாலையில் போலீசார் முகாமிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை பிடித்து உடனடி அபராதமாக ரூ.100 வசூலித்தனர். முதல்நாளான நேற்று முன்தினம் புதுச்சேரியின் புறநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2வது நாளாக திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், சீனிவாசன் மற்றும் போலீசார் திருபுவனை, திருவண்ணடார்கோவில், மதகடிப்பட்டு பகுதியில் முகாமிட்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மடக்கிப்பிடித்து ரூ.100 அபராதம் வசூலித்தனர். நேற்று 10 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் திருபுவனை பகுதியில் மொத்தம் 50 பேரிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் திருக்கனூர், காட்டேரிக்குப்பம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். கடந்த 2 தினங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 220 பேரிடம் உடனடி அபராதமாக தலா ரூ.100 வசூலிக்கப்பட்டது.

முதல் நாளை காட்டிலும் நேற்று இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றவர்கள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com