300 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் திருமண நிதி உதவி- தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டத்தில் 300 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் அரசு சார்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
300 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் திருமண நிதி உதவி- தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறையின் சார்பில் ஏழை-எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கமும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த வகையில் பள்ளி கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு தாலி செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரி படிப்பு முடித்த 150 பயனாளிகளுக்கு தாலி செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா இந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் பேசுகையில், பெண்களுக்கான முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து அரசு சார்பில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் குழந்தை திருமணங்கள் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இதன் காரணமாக பெண்களின் உடல்நலம் மேம்படுவதுடன் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளும் உருவாக வழிவகை ஏற்படும். மேலும் இக்காலத்தில் பெண்கள் அனைவரும் சிறுதொழில், கைத்தொழில் என சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com