மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மாமண்டபத்தில் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து, காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மாமண்டபத்தில் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்
Published on

ஸ்ரீரங்கம்,

தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மற்ற நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்கள் கூட, இந்த அமாவாசை தினத்தில் முன்னோரை நினைத்து திதி-தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா ஆசி வழங்கும் என்பது ஐதீகம். எனவே புரட்டாசி மகாளயபட்சம் எனப்படும், மகாளய அமாவாசையில் முன்னோருக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் பவுர்ணமி தொடங்கி, அமாவாசை வரையிலான காலம் மகாளய பட்சம் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பித்ருக்கள் என்று கூறப்படும் முன்னோர்கள் வானுலகிலிருந்து மண்ணுலகை நெருங்கி வருவதாக நம்பப்படுகிறது. அவ்வாறு வரும்போது அவர்களை மகிழ்விக்கும் சடங்குகளை நாம் செய்தால், அவர்களின் ஆசியோடு நம் வாழ்வில் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். பல மாதங்களாக தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போனவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் அது அனைத்து மாதங்களிலும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடானது ஆகும்.

இந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்தவர்களும், காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்கள் உதவியுடன் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்ததால் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியே கூட்ட நெரிசலாக காணப்பட்டது. அம்மாமண்டபம் படித்துறை, வீரேஸ்வரம் கருட மண்டபம், மேலூர் அய்யனார் கோவில் பகுதிகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

மாநகராட்சி சார்பில் அம்மாமண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படைவீரர்களும், ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட் அணிந்த மீட்பு படை வீரர்களும் மீட்பு பணி உபகரணங்களுடன் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் தயார்நிலையில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com