மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண்கள் இருமுடி கட்டி வந்து இங்கு அம்மனை வழிபடுவதால், இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 10 நாள் மாசி திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜையும், 8 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

மதியம் 1 மணிக்கு உச்சபூஜையும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலை சாயரட்சை பூஜையும், அதன்பிறகு ராஜராஜேஸ்வரி பூஜையும் நடைபெற்றது. இதில் 9 ஆயிரம் பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்க 82வது சமய மாநாடு கொடியினை தலைவர் கந்தப்பன் ஏற்றிவைத்தார். பொதுச்செயலாளர் ரத்தின பாண்டியன் அறிமுகவுரையாற்றினார். செயலாளர் முருகன் அறிக்கை வாசித்தார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சுவாமி கருணானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் பேசினார்கள். திருவிழாவையொட்டி மண்டைக்காடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com