மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
Published on

கும்பகோணம்,


ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாசிமக திருவிழாவினை முன்னிட்டு கடந்த 20ந் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5ம் நாள் ஓலைச்சப்பரமும், 8 மற்றும் 9ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற்றது.


இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளில் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்த கோவலின் அஸ்திர தேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடத்தினர்.


இதனைத்தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், தீயணைப்பு வீரர்கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com