நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி தம்பதியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி தம்பதியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய கன்னட சினிமா துணை இயக்குனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி தம்பதியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த தம்பதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது, தம்பதி இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவாகும். அந்த வீடியோவை தம்பதிக்கு அனுப்பிய மர்மநபர், தனக்கு ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், அவ்வாறு தரவில்லை என்றால் இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி மிரட்டி உள்ளார்.

மேலும், இந்த வீடியோ போன்று நீங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஏராளமானவை தன்னிடம் உள்ளதாகவும் அந்த மர்மநபர் கூறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி செய்வதறியாது திகைத்தனர். தங்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள், படங்கள் எவ்வாறு மர்ம நபருக்கு கிடைத்தது என்பது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது.

இதுதொடர்பாக அந்த தம்பதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார், தம்பதியின் செல்போன்களுக்கு குறுந்தகவல் வந்த நம்பர் யாருடையது என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள். இந்த நிலையில், தம்பதியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சந்தோஷ்குமார், பிரதீப், சுரேஷ், பிரசாந்த் என்பதும், அவர்களில் சந்தோஷ்குமார், கன்னட சினிமா துணை இயக்குனராக இருப்பதும் தெரியவந்தது.

மேலும், சந்தோஷ்குமாரும், அந்த தம்பதியும் கடந்த 10 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்ததும் தெரியவந்தது. இந்த பழக்கத்தின் மூலம், சந்தோஷ்குமார் தம்பதியின் செல்போன்களை வாங்கி பார்த்ததும், அதில் இருந்த தம்பதி நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், படங்களை தன்னுடைய செல்போனில் ஏற்றிக் கொண்டதும் தெரியவந்துள்ளது. தம்பதியிடம் இருந்து ரூ.5 கோடி வாங்கி, அதனை வைத்து படம் தயாரித்து இயக்க சந்தோஷ்குமார் முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com