மாங்காடு அருகே, பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது

மாங்காடு அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். யார் பெரிய ஆள்? என்பதில் ஏற்பட்ட தகராறில் அவரை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
மாங்காடு அருகே, பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது
Published on

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(வயது 28). பெயிண்டரான இவர், போகி பண்டிகை அன்று கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யுவராஜ் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

யுவராஜின் நண்பரான தாமோதரன் என்ற அப்பு (23) என்பவர்தான் கடைசியாக யுவராஜூடன் பேசியதாகவும், அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அப்புவை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடைய நண்பர்களான ஜெகன் என்ற ஜெகநாதன்(23), முத்துக்குமரன்(39) ஆகிய மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கொலையான யுவராஜ் உள்பட இவர்கள் 4 பேரும் பெயிண்டர் வேலைக்கு ஒன்றாக செல்வது வழக்கம். ஆனாலும் மற்ற இடங்களில் கிடைக்கும் வேலைகளுக்கு ஆட்களை பிடித்து அனுப்புவது மற்றும் ஏரியாவில் யார் பெரிய ஆள்? என்பதில் யுவராஜூக்கும், ஜெகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

ஜெகன் உள்பட நீங்கள் 3 பேரும் எனக்கு கீழ்தான் வேலை செய்யவேண்டும். மீறினால் ஜெகனை தீர்த்துக்கட்டி விடுவேன் என்றும் யுவராஜ் அடிக்கடி இவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஜெகன் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததால் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார்.

எனினும் யுவராஜ் தன்னை கொலை செய்வதற்கு முன்பாக நாம் முந்திக்கொண்டு அவரை தீர்த்து கட்டிவிடவேண்டும் என ஜெகன் முடிவு செய்தார். இதையடுத்து சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது குற்றாலத்தில் இருந்து அரிவாளை வாங்கிவந்து இருந்தார்.

சம்பவத்தன்று ஜெகனும், முத்துக்குமரனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அப்பு, யுவராஜை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். ஜெகனை பார்த்ததும், கொலை செய்து விடுவேன் என மீண்டும் யுவராஜ் மிரட்டினார். இனியும் யுவராஜை விட்டு வைக்கக் கூடாது என முடிவுசெய்த ஜெகன், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து யுவராஜை சரமாரியாக வெட்டினார்.

ஜெகனிடம் இருந்த அரிவாளை வாங்கிய மற்ற இருவரும், யுவராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அரிவாளை அங்கேயே வீசிவிட்டு 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். ஏரியாவில் யார் பெரிய ஆள்? என்பதில் ஏற்பட்ட தகராறில் யுவராஜை கொலை செய்து இருப்பது கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com