பெங்களூருவில் இளம்பெண் கடத்தல் வழக்கில் அக்காள் கணவர் உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில், இளம்பெண் கடத்தல் வழக்கில் அக்காள் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் இளம்பெண் கடத்தல் வழக்கில் அக்காள் கணவர் உள்பட 3 பேர் கைது
Published on

பெங்களூரு:

இளம்பெண் கடத்தல்

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாருதிநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இளம்பெண் ஸ்கூட்டரில் வெளியே சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரை ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து ஸ்கூட்டரை காரில் வந்தவர்கள் வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

ஆனாலும் காரில் வந்த 3 பேர் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கொடிகேஹள்ளி போலீசார் கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இளம்பெண் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

மைத்துனி மீது மோகம்

அப்போது இளம்பெண்ணை அவரது அக்காளின் கணவர் தேவராஜ் உள்பட 3 பேர் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் ஒரு வீட்டில் இளம்பெண்ணும், தேவராஜ் உள்பட 3 பேரும் இருப்பது பேலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டனர். மேலும் தேவராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது துமகூருவை சேர்ந்த சீனிவாஸ், கொடிகேஹள்ளி மாருதிநகரில் வசிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பின்னர் கொடிகேஹள்ளியில் மனைவியுடன் வசித்து வந்த சீனிவாஸ் பல்பொருள் அங்காடியில் ஊழியராகவும் வேலை செய்தார். இந்த நிலையில் தனது மனைவியின் தங்கையான இளம்பெண் மீது சீனிவாசுக்கு மோகம் உண்டானது. இதனால் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று சீனிவாஸ் நினைத்தார். இதுபற்றி சீனிவாஸ் தனது மைத்துனியான இளம்பெண்ணிடம் கூறி உள்ளார். ஆனால் இதனை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார்.

வழக்குப்பதிவு

இதனால் இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய வேண்டும் என்று சீனிவாஸ் முடிவு செய்து உள்ளார். இதுபற்றி சீனிவாஸ் தனது கூட்டாளிகளான நவீன்குமார், குமாரிடம் கூறி உள்ளார். இதற்கு அவர்களும் உதவுவதாக தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 22-ந் தேதி இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து காரில் கடத்தி சென்றதும், சக்லேஷ்புராவில் ஒரு வீட்டில் வைத்து இருந்ததும், இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றதும் தெரிந்தது. கைதான 3 பேர் மீதும் கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com