ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலி

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலி
Published on

சாத்தூர்

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குளிக்க சென்றனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 37), மகன் ஸ்ரீகேசவன் (10).

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் விஜயலட்சுமி தனது மகனுடன் சிவகாசி சசிநகரில் வசித்து வந்தார். மகன் ஸ்ரீகேசவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில் விஜயலட்சுமி தனது மகனுடன் நென்மேனியில் உள்ள கணவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார்.

பாலகிருஷ்ணனின் சகோதரர் ராஜகோபால். இவரது மகன் பூர்ணகோகுல்(10). இவனும் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஆழமான பகுதியில் சிக்கினர்

விஜயலட்சுமி, ஸ்ரீகேசவன் நேற்று மதியம் நன்மேனி பகுதியில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் சிறுவன் பூர்ணகோகுலையும் அழைத்து சென்றதாக தெரிகிறது. இவர்கள் 3 பேரும் வைப்பாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் இருவரும் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் அதில் சிக்கி வெளியில் வரமுடியாமல் உயிருக்கு போராடினர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.

3 பேரும் சாவு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் ஆழமான பகுதியில் சிக்கியதால் நீரில் மூழ்கினார். இதனால் சிறிதுநேரத்தில் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இதைபார்த்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் ஆற்றில் இறங்கி 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன,. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com