ரவுடிகள் கொலை வழக்கில் சரணடைந்த பிரபல தாதா உள்பட 3 பேர் புதுவை சிறையில் அடைப்பு

ரவுடிகள் கொலை தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல தாதா உள்பட 3 பேர் புதுவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரவுடிகள் கொலை வழக்கில் சரணடைந்த பிரபல தாதா உள்பட 3 பேர் புதுவை சிறையில் அடைப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞான சேகர் என்ற நாய் சேகர் (வயது 25), காந்திதிருநல்லூரை சேர்ந்த சதீஷ் (21), சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு (22) ஆகிய 3 ரவுடிகள் தங்கள் கூட்டாளிகளுடன் தீபாவளி தினத்தன்று நள்ளிரவில் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியது. இதில் நாய் சேகர், சதீஷ், ஜெரால்டு ஆகிய 3 பேரும் பரிதாபமாகச் செத்தனர். இந்த சம்பவத்தில் அவர்களது கூட்டாளிகளான ரங்கராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த படுகொலை குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை சம்பவம் நடந்தபோது நாய் சேகருடன் இருந்தவர்கள் யார், யார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். விசாரணைக்காக அவர்களை தேடி போலீசார் சென்ற போது சண்முகாபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (21) என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சிறையில் அடைப்பு

அதைத்தொடர்ந்து தீவிர தேடுதல்வேட்டை நடத்தி நந்த குமார், சாணரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்ற சங்கர் கணேஷ், புதுப்பேட்டையை சேர்ந்த சின்னதுரை, முத்திரையர்பாளையம் சுதாகர் (25), லாஸ்பேட்டையை சேர்ந்த வினோத் (21) என்ற கலையரசன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதா தமிழரசன் (28), வேலுமணி (31), அந்தோணிராஜ் (31) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர். இது குறித்து புதுவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சரண் அடைந்த தமிழசரன் உள்பட 3 பேரும் நேற்று காலை புதுவை கொண்டு வரப்பட்டனர். அவர்கள் புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோர்ட்டில் மனு தாக்கல்

இந்த நிலையில் 3 ரவுடிகள் கொலை வழக்கு தொடர்பாக தற்போது சிறையில் உள்ள பிரபல தாதா தமிழரசன் உள்பட 8 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மேட்டுப்பாளையம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதிக்கு பின்னர் அவர்களிடம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு பின்னர்தான் 3 ரவுடிகள் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com