வீட்டில் கள்ளநோட்டுகளை தயாரித்த தம்பதி உள்பட 3 பேர் கைது

திருச்சி பாலக்கரையில் வீட்டில் கள்ளநோட்டுகளை தயாரித்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடைகளில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டபோது போலீசாரிடம் சிக்கினர்.
வீட்டில் கள்ளநோட்டுகளை தயாரித்த தம்பதி உள்பட 3 பேர் கைது
Published on

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் நேற்று பகல் ஆம்னிவேனில் ஒரு பெண் உள்பட 3 பேர் வந்தனர். அவர்கள் கடைவீதியில் உள்ள பழக்கடை, பெட்டிக்கடைகளில் 100 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி கொண்டு, அதற்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்றினர். அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் பொருட்களை வாங்கியபோது, கடைக்காரர் 500 ரூபாய் நோட்டை பார்த்துவிட்டு ஜெராக்ஸ் போல உள்ளதே என்று கூறினார். உடனே அவர்கள் மீதி பணத்தை கூட வாங்காமல் வேனில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.

அப்போது அந்த கடையில் நின்ற சிலர் வேனில் சென்றவர்களை மோட்டார் சைக்கிள்களில் விரட்டி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வேனில் இருந்து 3 பேரும் இறங்கி, குளத்தூர் கடைவீதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி நோட்டை மாற்றினார்கள். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்த வாலிபர்கள் 3 பேரையும் பிடித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து வேனுடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

தம்பதி உள்பட 3 பேர் சிக்கினர்

விசாரணையில், அவர்கள் திருச்சி பாலக்கரையை சேர்ந்த அப்துல்சுக்கூர் (வயது 41), அவரது மனைவி ஹசீனாபானு (32), வேன் டிரைவர் சையது காசிம் (55) என்பது தெரியவந்தது. அவர்களுடைய வேனில் கடைவீதிகளில் வாங்கிய பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும், ரூ.16,900-மும் இருந்தது. மேலும், இவர்கள் பாலக்கரை என்.எம்.தெருவில் வசித்து வருவதும், வீட்டின் மாடியில் வெள்ளைதாளில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் எடுக்கும் எந்திரம் மூலம் கலர்ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் அப்துல் சுக்கூரை காரில் அழைத்துக்கொண்டு பாலக்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு என்.எம். தெருவில் உள்ள அவரது வீட்டிற்குள் சென்று 2-வது மாடியில் சோதனை நடத்தினார்கள்.

கட்டு, கட்டாக கள்ளநோட்டுகள்

அங்கு பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் எந்திரம், ரூபாய் நோட்டுகளின் நடுவில் ஒட்டப்படும் பளபளப்புடன் கூடிய காகிதம் மற்றும் கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்தன. மேலும், அங்கிருந்த ஒரு பையில் கட்டு, கட்டாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தன. அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல்சுக்கூர், ஹசீனாபானு, சையதுகாசிம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து கீரனூர் போலீசார் கூறுகையில், இவர்கள் கடந்த 3 மாதமாக கள்ளநோட்டுகளை தயாரித்து வந்துள்ளனர். அதனை புழக்கத்தில் விட முயற்சித்தபோது சிக்கி உள்ளனர். பிடிபட்ட 3 பேருக்கும் மட்டும் இதில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என விசாரித்து வருகிறோம். வறுமையின் காரணமாகவும், கடன் அதிகமாகி விட்டதாலும், குறுக்கு வழியில் சம்பாதிக்க இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

பாலக்கரை என்.எம்.தெருவில் உள்ள அப்துல்சுக்கூரின் வீட்டில் கீரனூர் போலீசார் சோதனை நடத்த சென்றபோது, இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் போலீசார் எதற்காக இங்கு வந்துள்ளார்கள் என்று குழப்பத்துடன் இருந்தனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. உடனே அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு, அங்குள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டுகளை தயாரித்துள்ளதாகவும், இது தொடர்பாக சோதனை நடத்த வந்ததாகவும், முறைப்படி விசாரணையை மேற்கொள்வதாகவும் கூறினார். இதனை கேட்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகே அங்கு கூடி நின்ற அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com