

திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது வங்கியாளர்கள் மற்றும் பிற துறையினர் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
திருவாரூர் மாவட்டத்தில் 2018-19 நடப்பு நிதி ஆண்டில் வங்கி கடன் இலக்கு ரூ.3,814 கோடியே 32 லட்சம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 64 சதவீதம் பெரும் பங்குகள் விவசாயத்திற்காக ரூ.2,453 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு ரூ.640 கோடியே 51 லட்சமும், மற்ற கடன்களுக்காக ரூ.720 கோடியே 65 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடன் இலக்கை அடைய வங்கியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அபிவிருத்தி பெற கடன் வசதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பாலாஜி, நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் பெட்ரிக் ஜாஸ்பர் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.