ஈரோட்டில் கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கான பள்ளி ‘பரிமாற்றம்‘ நிகழ்ச்சி

ஈரோட்டில் கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவமாணவிகள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
ஈரோட்டில் கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கான பள்ளி ‘பரிமாற்றம்‘ நிகழ்ச்சி
Published on

ஈரோடு,

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவமாணவிகள் புதிய அனுபவங்கள் பெறவும், கற்றல் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் பள்ளி பரிமாற்றம் என்ற நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவமாணவிகள் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை பார்வையிட்டு அதன் மூலம் புதிய அனுபவங்களை பெறவும், நகர்ப்புற பள்ளிக்கூட மாணவமாணவிகள் கிராமப்புற பள்ளிகளுக்கு சென்று பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவமாணவிகள், அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று ஒரு நாள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுபோல் அரசு நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவமாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று சிறந்த அனுபவங்கள் பெற்று வருகிறார்கள்.

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 20 மாணவமாணவிகள் ஆசிரியை கவிதா, சிவா ஆகியோர் தலைமையில் வந்தனர். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகளும், மாணவமாணவிகளும் வரவேற்றனர். பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி பயிற்சியில் 2 பள்ளிக்கூடங்களையும் சேர்ந்த 40 மாணவமாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் ஆன்லைன் மூலம் வெளிநாட்டு மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் வழங் கப்பட்டது. 2 பள்ளிக்கூட மாணவமாணவிகளும் கல்வி, பொது அறிவு குறித்து உரையாடினார்கள்.

முக்கிய நிகழ்வாக ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் உள்ள அருங்காட்சியத்துக்கு மாணவமாணவிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு உள்ள பழமையான கற்சிலைகள், டைனோசர் மாதிரி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். சிலைகள் குறித்து ஆசிரியை மீரா விளக்கி கூறினார்.

பள்ளிக் கூட தாளாளர் மங்களவதி மாணவமாணவிகளை வாழ்த்தினார். மாலையில் அனைத்து மாணவமாணவிகளுக்கும் எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி பரிசுகள் வழங்கினார். ஆசிரியைகள் ரூபி, மல்லிகா, கவிதா மற்றும் அனைத்து ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com