ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு காய்கறி வியாபாரி கொலையில் மகன் கைது

சென்னையில் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்த காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக அவரது மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு காய்கறி வியாபாரி கொலையில் மகன் கைது
Published on

சென்னை,
சென்னை ராயப்பேட்டை நாயர் வரதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 56). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் ராமகிருஷ்ணன் (28) மாநகராட்சி ஊழியர் ஆவார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் காய்கறி வியாபாரி சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரிடம் விசாரித்தபோது குடும்பத்தகராறில் தனது மகன் ராமகிருஷ்ணன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனது தந்தையை தீ வைத்து எரிக்கவில்லை என்று மறுத்தார். மேலும் சங்கர் வீட்டில் பூட்டிய அறையில் தான் தீயில் எரிந்தபடி கிடந்தார். எனவே ராமகிருஷ்ணன் தீ வைத்து கொளுத்தியிருக்க வாய்ப்பில்லை என்று முதலில் கருதப்பட்டது. இதனால் சந்தேக மரணம் சட்டப்பிரிவின்கீழ் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது காய்கறி வியாபாரி சங்கர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அவர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது 2-வது மகன் ராமகிருஷ்ணன் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும் கண்டறியப்பட்டது.

தந்தையை கொலை செய்ததை முதலில் மறுத்த ராமகிருஷ்ணன் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு கொலை செய்ததை ஒப்புகொண்டதாக தெரிகிறது. அதன்பேரில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ராமகிருஷ்ணனும் நேற்று கைது செய்யப்பட்டார்.

தந்தையை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து ராமகிருஷ்ணன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது தாயார் இறந்தபிறகு, எனது தந்தையின் போக்கு சரியில்லை. பெண் ஒருவர் எனது தந்தைக்கு சமையல் செய்து கொடுப்பார். அந்த பெண்ணோடு எனது தந்தை நெருக்கமாக பழகி வந்தார்.

இது எனக்கு பிடிக்கவில்லை. சிலநேரங்களில் அந்த பெண்ணோடு எனது தந்தை அறையை பூட்டிக்கொண்டு தூங்கிவிடுவார். நான் வெளியில் படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் நாங்கள் வசித்த வீடு சொந்த வீடாகும். அந்த வீட்டை மகன்களான எங்கள் பெயரில் எழுதி தருமாறு கேட்டேன். எனது தந்தை மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட சண்டையில்தான் எனது தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க நேரிட்டது.

இவ்வாறு ராமகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com