நாய்க்கு விஷம் வைத்து வியாபாரி வீட்டின் மீது கல் வீச்சு; மோட்டார் சைக்கிள் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்

நாய்க்கு விஷம் வைத்து வியாபாரி வீட்டின் மீது கல்வீசி, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நாய்க்கு விஷம் வைத்து வியாபாரி வீட்டின் மீது கல் வீச்சு; மோட்டார் சைக்கிள் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
Published on

ஆரல்வாய்மொழி,

செண்பகராமன்புதூர் அருகே துணை மின்நிலையம் பகுதியில் வசிப்பவர் கணேசபெருமாள் (வயது 43). இவர் அப்டா மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை கணேசபெருமாளின் வீட்டில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்தில் திடீரென வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மீது சரமாரியாக கற்கள் வந்து விழுந்தன. இதில் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன.

இதனால், அதிர்ச்சி அடைந்த கணேச பெருமாள் பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். பக்கத்து வீட்டுக்காரர் வந்ததும் கணேச பெருமாளும் வெளியே வந்து பார்த்தார்.

மோட்டார் சைக்கிள் எரிப்பு

அப்போது வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் வைக்கப்பட்டு இருந்தது. அதாவது, இரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஏதோ ஒரு உணவில் விஷம் கலந்து நாய்க்கு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டதும் நாய் மயங்கி விட்டது. நாய் மயங்கிய சமயத்தில், மர்ம நபர்கள் வியாபாரியை அச்சுறுத்தும் வகையில் அவருடைய வீட்டின் மீது கற்களை வீசியும், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. முன்விரோத தகராறில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே விஷம் சாப்பிட்ட நாயும் பரிதாபமாக இறந்தது. பின்னர் இதுகுறித்து கணேச பெருமாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com