கடம்பூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை: தடுப்பணை-வனக்குட்டைகள் நிரம்பின

கடம்பூர் மலைப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தடுப்பணை - வனக்குட்டைகள் நிரம்பின.
கடம்பூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை: தடுப்பணை-வனக்குட்டைகள் நிரம்பின
Published on

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து திடீரென பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாலையில் சாக்கடை நீருடன் மழைநீரும் ஓடியதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது.

நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் பசுவனாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வருகிறது.

இதனால் கடம்பூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், குன்றி, மாக்கம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதேபோல் கவுந்தப்பாடி மற்றும் பவானி பகுதியிலும் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரேபாளையம், ஒங்கல்வாடி, திம்பம், சென்டர்தெட்டி, மாவள்ளம் ஆகிய பகுதியில் இடி-மின்னலுடன் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றுடன் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்குகெடுத்து ஓடியது.

இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், எண்ணமங்கலம், பட்லூர், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com