மகாளய அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலயகுளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலயகுளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Published on

திருவாரூர்,

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது. மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்குவது வழக்கம். மேலும் இயலாதவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதன்படி நேற்று மகாளய அமாவாசையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் அதிகாலையில் பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரத்திலும் ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் திருக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி, அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோல் திருவோணமங்கலம் ஞான புரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவிலிலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com