

செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கீழாநெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது 24). சென்னை சட்டக்கல்லூரியில் சமையல்மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி விஜயலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சைக்கிளில் வந்த அலெக்ஸ்பாண்டியன், விஜயலட்சுமியிடம் ஓரமாக செல்லும்படி ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது.
இதனை அறிந்த விஜயலட்சுமியின் சகோதரர்கள் விசுவநாதன், லோகநாதன் மற்றும் சிலர் மாரியநல்லூர் கிராமத்தின் அருகே அலெக்ஸ்பாண்டியனை மடக்கிப்பிடித்து பெருங்கட்டூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த அலெக்ஸ்பாண்டியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அலெக்ஸ்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விசுவநாதன், லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்துள்ளார்.
இதேபோல விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.