பண்ணை குட்டைகளில் ‘திலேப்பியா’ மீன்களை வளர்க்கலாம்; தென்காசி கலெக்டர் சமீரன் தகவல்

பண்ணை குட்டைகளில் திலேப்பியா மீன்களை வளர்க்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன்
தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன்
Published on

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திலேப்பியா மீன்கள்

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களைக் காட்டிலும் பண்ணைக்குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக்கூடியது.

மேலும் நுகர்வோர்கள் அதிகம் விரும்பக் கூடியது. இந்த மீன்கள் நீரின் அமில, காரத்தன்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளையும் அதிகளவு எதிர்கொண்டு வேகமாக வளரக்கூடியது. எனவே விவசாயிகள் தங்களது பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களைத் (கிப்ட் திலேப்பியா மீன்களை) தேர்வு செய்து வளர்த்து அதிக அளவில் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பு வேலி

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்இனக்குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன்பண்ணையில் வருடம் முழுவதும் விற்பனைக்கு தயராக உள்ளது. அவற்றை விவசாயிகள் கொள்முதல் செய்து வளர்த்து பயன் பெறலாம். மேலும் இவ்வகை இன மீன்களை வளர்க்கும் விவசாயிகள் தங்களது மீன்பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, எக்காரணம் கொண்டும் இம்மீன்கள் அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் பரவா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மீன்பண்ணையை சுற்றி சரியான முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து, நெல்லை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, அதன் பின்னரே தங்களது பண்ணைகளில் திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், திலேப்பியா மீன்பண்ணைகள் அமைப்பது தொடர்பாக கூடுதல் விவரம் தேவைப்படும் பட்சத்தில் நெல்லை மகாராஜா நகரில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com