குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்து வந்த ‘மும்பை பாக்’ போராட்டம் நிறுத்தம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த மும்பை பாக் போராட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்து வந்த ‘மும்பை பாக்’ போராட்டம் நிறுத்தம்
Published on

மும்பை,

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மும்பை நாக்பாடா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி முதல் முஸ்லிம் பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு அனுமதியையும் மீறி இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் நடப்பதை போன்று இங்கும் நடந்து வந்ததால், இது மும்பை பாக் போராட்டம் என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது மராட்டியத்தையும் படாதபாடு படுத்தி வருகிறது.

இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மராட்டிய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதையடுத்து நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாக்பாடாவில் நடந்து வரும் மும்பை பாக் போராட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் போராட்டம் மீண்டும் நிச்சயமாக தொடங்கும். ஒரே இடத்தில் கூடியிருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். இருப்பினும் சமூக வலைதளத்தில் எங்கள் போராட்டம் தொடரும்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றில் எங்களுக்கு அரசுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com