

பணகுடி,
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. தலைவர் மாம்பழ சுயம்பு தலைமை தாங்கினார். செயலாளர் மணி, பொருளாளர் ஆலன் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபால் தொகுப்புரை வழங்கினார். சங்க ஆலோசகர் ராமராஜா வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில் விக்கிரமராஜா பேசியதாவது:-
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். மறுசுழற்சி செய்ய தகுந்த பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் மக்கள் உபயோகப்படுத்தலாம் என்ற அரசின் உத்தரவு மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மக்களுக்கு போதிய பிரசாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.
வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதால் சிறு வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு சற்று கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய 12 வகை பொருட்களான வாழை இலை, பாக்கு இலை, தேக்கு இலை மற்றும் தாமரை இலை போன்ற எளிதில் மக்கும் பொருட்கள் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க காலஅவகாசம் நீட்டிப்பு முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வணிகர் சங்க அமைப்பை சேர்ந்த சின்னத்துரை, பாண்டியராஜன், ஜாய் ராஜா, ராஜன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொகுதி செயலாளர் ஜெய்சன், வக்கீல் சுபாஷ் ஆகியோர் நன்றி கூறினர். சங்கத்தின் சார்பில் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.