தஞ்சை அருகே பரிதாபம், டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து என்ஜினீயரிங் மாணவி பலி

டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில், காரில் இருந்து தவறி சாலையில் விழுந்த என்ஜினீயரிங் மாணவியின் ஆடை அந்த வழியாக சென்ற மற்றொரு வாகனத்தில் சிக்கியது. இதனால் சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்த மாணவி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை அருகே பரிதாபம், டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து என்ஜினீயரிங் மாணவி பலி
Published on

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த பரத்(வயது 21), சூர்யா(21), கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த அரவிந்த்(21) ஆகியோர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். மேலும் இதே பல்கலைக்கழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அக்ரஹார தெருவை சேர்ந்த சீனிவாசன் மகள் ரம்யா(21), சென்னையை சேர்ந்த நித்யா(21) ஆகியோர் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டும், திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சவுமியா(21) சட்டப்படிப்பு 5-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

இவர்களில் மாணவர்கள் பரத், அரவிந்த், சூர்யா ஆகியோர், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். இதேபோல் மாணவிகள் ரம்யா, நித்யா, சவுமியா ஆகியோர், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கேரளாவை சேர்ந்த மாணவர் அரவிந்த், தனது சொந்த ஊருக்கு சென்றார். அவரை திருச்சிக்கு சென்று ரெயிலில் ஏற்றி விட பரத், ரம்யா, சூர்யா, நித்யா, சவுமியா ஆகியோர் பரத்தின் காரில் திருச்சி சென்றனர். திருச்சியில் அரவிந்த்தை ரெயிலில் ஏற்றி விட்ட பின்னர் பரத் உள்பட 5 பேரும் மீண்டும் அதே காரில் தஞ்சைக்கு திரும்பி வந்தனர். காரை சூர்யா ஓட்டினார்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்த கார் வந்து கொண்டிருந்தது. தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த 3-ம் கண் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் 4 முறை உருண்டு தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது காரின் கதவு அருகே அமர்ந்திருந்த மாணவி ரம்யா காருக்குள் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். கவிழ்ந்த காரின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தில் ரம்யாவின் ஆடை சிக்கியது. இதனால் சாலையில் சுமார் 50 அடி தூரம் தர, தரவென இழுத்து செல்லப்பட்ட மாணவி ரம்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விபத்து நடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் சிக்கியிருந்த நித்யா, சவுமியா, சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான மாணவி ரம்யாவின் தந்தை சீனிவாசன், ஒரு கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலியான மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com