

கல்பாக்கம்,
திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் கட்சி கொடியும் ஏற்றி வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை பஸ் நிலையத்தில் ஒன்று கூடினர். திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், பெயர் பலகையை அப்புறப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டனர்.