நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
Published on

நெல்லை,

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்திலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வருவாய்த்துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 16 தாலுகா அலுவலகங்களிலும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வராததால் தாலுகா அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் ஊரக வளர்ச்சித்துறையிலும் ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு வராததால் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி ஆரம்ப, நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வராததால் பல பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகின்ற பள்ளிக்கூடங்களில் 2 ஆசிரியர்களும் பணிக்கு வராததால் அந்த பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பல பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை. இதனால் மாணவர்கள் படிக்காமல் பள்ளிக்கூடத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். மேலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், மாணவ-மாணவிகள் மதியம் வரை காத்திருந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டன. அங்கு பணியாற்றிய ஆசிரியர்களில் சிலர் பணிக்கு வரவில்லை. இதனால் பணிக்கு வந்த ஆசிரியர்களை வைத்து பள்ளிக்கூடத்தை இயக்கினார்கள். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

நெல்லை மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நிர்வாகிகள் மார்த்தாண்ட பூபதி, அண்ணாத்துரை, முத்துசாமி, முருகானந்தம், எடிசன், மனோகரன் மோசஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், மணிமேகலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com