நெல்லை கண்ணனை 13-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு - மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லை கண்ணனை வருகிற 13-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை கண்ணனை 13-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு - மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Published on

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜனதாவினர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நெல்லை கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தியதால், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறப்பட்டது.

ஆனால் அதன்பிறகு அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. திருவனந்தபுரம் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே மேலப்பாளையம் போலீசார், அவர் இருக்கும் இடத்தை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர் திருச்சி அருகே உள்ள பெரம்பலூரில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் அந்த விடுதிக்கு சென்று நெல்லை கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 5.30 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு அழைத்து வரப்பட்ட அவரை, காலை 7.30 மணி அளவில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களிடம் நெல்லை கண்ணன் உடல் தகுதி சான்று கோரப்பட்டது. டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட பின், மதியம் 12.30 மணி அளவில் சான்று வழங்கினர். இதற்கிடையே அவர் மீது மேலும் 2 பிரிவுகளில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் ஜீப்பில் ஏற்றி, கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாபு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட்டு பாபு, நெல்லை கண்ணனிடம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரத்தை கூறினார். பின்னர் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், சிறைக்கு அனுப்ப உத்தரவிடக்கூடாது என்று அவருடைய ஆதரவு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் விடுவிக்க பா.ஜனதா வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு, மாஜிஸ்திரேட்டு பாபு, போலீசார் தாக்கல் செய்திருந்த ஆவணங்களை பார்வையிட்டு நெல்லை கண்ணனை வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், ஜீப்பில் அவரை ஏற்றி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த அரசியல் கட்சியினர், ஆதரவு வக்கீல்கள் அவரை சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி ஜீப் செல்ல வழிசெய்தனர்.

பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அடைக்கப்பட்டார். கோர்ட்டு வளாகத்துக்கு முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்பட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

நெல்லை கண்ணனை சிறைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அரசியல் கட்சியினர், வக்கீல்கள் கோர்ட்டு முன்பு உள்ள நெல்லை -தூத்துக்குடி மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி காசி விசுவநாதன், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், லெனினிஸ்டு கம்யூனிஸ்டு வக்கீல் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் கனி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், காங்கிரஸ் வக்கீல்கள் பிரம்மா, காமராஜ், த.மு.மு.க. பிலால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணனை திடீரென்று சேலம் மத்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் சேலத்துக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com