

திருப்போரூர்
சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்த சுவாமி கோவிலில், கடந்த 20-ந் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 21-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 22-ந் தேதி புருஷாமிருக வாகனத்திலும் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெற்றது. 23-ந் தேதி காலையில் பல்லக்கு உற்சவமும், பூத வாகனத்தில் வீதி உலாவும், 24-ந்தேதி வெள்ளி அன்னவாகனத்தில் முருகப்பெருமானின் வீதியுலாவும் நடைபெற்றது.நேற்று காலை லட்சார்ச்சனை முடிந்து, கந்தசுவாமி பெருமான், சரவணப்பொய்கை குளத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் யாகசாலைக்கு கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) மாலை முருகன் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை தக்கார் உதவி ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை க.ரமணி, திருப்போரூர் செயல் அலுவலர் கே.எஸ்.நற்சோணை, கோவில் மேலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.