திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வர்த்தகர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்
Published on

திருப்பூர்,

டீசல் மற்றும் பெட்ரோலுக்கான விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சங்கம் மற்றும் உறுப்பினர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான லாரிகள் இயக்கப்படவில்லை.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட லாரி உரிமையாளர்கள் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வர்த்தக நகரமான திருப்பூருக்கு இது பெருத்த இழப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநில வர்த்தகர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களை கொடுக்க முடியாமல் தொழில்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் பல ஆர்டர்களை இழக்கும் வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

சொந்தமாக லாரிகள் வைத்துள்ள ஏற்றுமதி நிறுவனத்தினர் மட்டும் சரக்குகளை தங்கள் வாகனத்தில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு எடுத்து சென்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். பிற உரிமையாளர்களின் லாரிகளை நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 2-வது நாளாக லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் கூட்செட்டில் வெளியூர்களை சேர்ந்த டிரைவர் மற்றும் கிளனர்கள் பலர் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு விட்டு லாரிகளில் ஓய்வெடுக்கின்றனர்.

மேலும், பலர் லாரிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல டன் சரக்குகள் லாரி புக்கிங் அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் தேங்கி கிடக்கின்றன. ரெயில்கள் மூலம் அனுப்பினாலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சரக்குகள் சென்று சேர்ந்த உடன் அங்கிருந்து லாரிகளில் கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளதால் அவசர கதியிலான உள்நாட்டு ஆர்டர்களையே அனுப்பி வருகின்றன. 2-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பதால் ரூ.200 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com