திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் முன்வரவேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி ஒருமுறை பயன்பாடு மற்றும் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் மீதான தடை வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரும் பொதுமக்களுக்கு, அதற்கு மாற்றாக துணிப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நேற்று முதல் வருவாய்த்துறை, அலுவலகங்களான கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதோடு, வேளாண்மைத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள சுமார் 25 லட்சம் மக்கள் பயன்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய தன்னார்வ அலுவலர்கள் முன்வருவதோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து திருப்பூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திகழ வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பயன்படுத்த வேண்டிய மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான உறுதிமொழியை அந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, இணை இயக்குனர் (வேளாண்மை) தமிழ்செல்வன், மாவட்ட சமூக நல அதிகாரி பூங்கோதை, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com