திருப்பூரை அடுத்த காசிப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூரை அடுத்த காசிப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் சாயக்கழிவுநீர் சென்றது. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரை அடுத்த காசிப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Published on

நல்லூர்,

திருப்பூரை அடுத்த காசிப்பாளையத்தில் நொய்யல் ஆற்று தடுப்பணையில் நேற்று பொங்கும் நுரையுடன் சாயக்கழிவுநீர் சென்றது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயல் காரணமாக நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திருப்பூரை அடுத்த நல்லூர், காசிப்பாளையம் அருகே உள்ள நொய்யல் தடுப்பணை நிரம்பி தண்ணீர் அதிகளவில் சென்றது.

அதில் கழிவுநீர், சாயக்கழிவுநீர் கலந்து சென்றதால் தடுப்பணை நிரம்பி ஆற்று நீரில் சாயக்கழிவு கலந்து சென்றது. இதனால் அதிகளவு நுரை காணப்பட்டது. மழை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சில சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் இதுபோன்ற நேரத்தில் சாயக்கழிவு நீரை ஆற்றில் கழிவுநீர் லாரிகள் மூலமும் மற்றும் பாதாள சாக்கடையிலும் கலந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும் சாய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சாம்பல் போன்ற சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் சிலர் இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். அத்துடன் பனியன் நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பேரல்களில் கொண்டு வந்தும் கொட்டி விட்டு செல்கின்றனர். அவை மழை நீரில் கரைந்து நொய்யல் ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக இதை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com