திருப்பூர் வடக்கு தொகுதியில் விரைவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும், கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

திருப்பூர் வடக்கு தொகுதியில் விரைவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் விரைவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும், கே.ஏ.செங்கோட்டையன் உறுதி
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழா மற்றும் ஐம்பெரும் விழா கிராம கல்விக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வனிதா ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், குணசேகரன், நடராஜன், முதன்மை கல்வி அதிகாரி சாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து, தலைமை ஆசிரியர் சாந்திக்கு கேடயம், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருப்பூர் வடக்கு தொகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விரைவில் தொடங்கப்படும். இதற்காக இதே பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கு மாற்றி கொடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மேஜைகள் மாணவ-மாணவிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.

விழாவில் அதே பள்ளியில் படித்து தற்போது அதேபள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவரும் சாந்தி மற்றும் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான திரைப்பட இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிகொண்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com