சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா; கலெக்டர், அமைச்சர் பங்கேற்பு

சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர், அமைச்சர் கலந்துகொண்டார்கள்.
சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா; கலெக்டர், அமைச்சர் பங்கேற்பு
Published on

சென்னிமலை,

சென்னிமலையில் 4-10-1904 ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் குமரன். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து திருப்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போலீசார் குமரனை தடியால் தாக்கிய போது தேசிய கொடியை தாங்கி பிடித்தபடி உயிர் நீத்தார். அதனால் திருப்பூர் குமரன் என்றும், கொடிகாத்த குமரன் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் திருப்பூர் குமரனின் 116-வது பிறந்த நாள் விழா சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள குமரன் இல்லத்தில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் உ.தனியரசு (காங்கேயம்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரணி (மொடக்குறிச்சி), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), நடராஜன் (பல்லடம்) மற்றும் ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் விழாவில் கலந்து கொண்டு தியாகி குமரனின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார், குமரனின் வாரிசு அண்ணாத்துரை மற்றும் பொது நல அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள். முன்னதாக செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த குமரனின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தியாகி குமரனின் 116-வது பிறந்த நாள் விழா தென்னிந்திய செங்குந்த மகாஜன இளைஞரணி சார்பில் சென்னிமலையில் நடைபெற்றது. இதையொட்டி முகாசிப்பிடாரியூரில் இருந்து சென்னிமலையில் உள்ள குமரன் சதுக்கம் வரை இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பின்னர் செங்குந்த மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தா சுத்தானந்தன் தலைமையில் குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் புதிய நீதி கட்சியின் மாநில துணை செயலாளர் இருகூர் ஏ.அசோக் தலைமையில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆதித்யா ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலாளர் சூலூர் கண்ணன், கொள்கை பரப்பு செயலாளர் அன்பு ராமலிங்கம், ஈரோடு மாவட்ட செயலாளர் எம்.ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com