திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
Published on

தாராபுரம்,

அமராவதி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்புத்துறைப்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ். மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19). கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பரான பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரகாசின் உடல் நலம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு நேற்று நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சபரீஸ்வரன் (19), பிரகாஷ் (19), கோகுல்நாத் (19) அருண்பாண்டியன் (19) வடுகபாளையத்தை சேர்ந்த மனோஜ் (20), புதுநவக்கொம்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (19), மோகன் (19) ஆகியோர் சென்றனர்.

அங்கு அவரை பார்த்து விட்டு மதியம் 2 மணிக்கு அனைவரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அதன்படி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நவீன்ராஜ் தண்ணீரில் மூழ்கினார்.

உடனே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்.உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நவீன்ராஜ் இறந்தார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தேடியபோது, அவருடைய உடல் அந்த பகுதியில் மிதந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று நவீன்ராஜ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com